தூத்துக்குடியில் சாலை ஓரத்தில் வேப்பமரத்தடியில் இருந்த அம்மனை சாட்சியாக வைத்து காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டுள்ளது. தூத்துக்குடியில் நிகழ்ந்த இந்த காதல் திருமணத்தை சாலைகளில் கடந்து சென்றவர்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் சொல்வார்கள். சுற்றமும் நட்பும் புடைசூழ.. சொந்த பந்தங்கள் வாழ்த்த கெட்டி மேளம் கொட்ட ஒரு சுபயோக சுப தினத்தில் திருமணங்கள் நடைபெறும்.
அவரவர் வசதியைப் பொறுத்து திருமண மண்டபங்களிலும் கோவில்களிலும் திருமணம் நடைபெறுவது வழக்கம். சிலரோ வீட்டு வாசலில் கூட திருமணம் செய்து கொள்வார்கள். அது அவரவர்கள் விருப்பம். காதல் திருமணமாகவே இருந்தாலும் நண்பர்கள் புடைசூழ ரிஜிஸ்டர் அலுவலகத்திலோ கோவிலிலோ கல்யாணம் செய்து கொள்வார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டினார் ஒரு மாணவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் அந்த திருமண வீடியோவை வெளியிட்டவரும் மாணவிக்கு தாலி கட்டியவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது.
தூத்துக்குடியில் இன்றைய தினம் சாலையோர வேப்பமரத்தடியில் அவசரம் அவரசமாக ஒரு இளம் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியின் பெயர் தினேஷ்,கார்த்திகா என்பதாகும். தினேஷ் ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகாவை காதலித்தார்.
இந்த காதலுக்கு கார்த்திகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. காரணம் இருவரும் வேறு சமுதாயம் என்பதாலேயே கார்த்திகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தினேஷின் பெற்றோர் சம்மதத்துடன் பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலுக்கு தம்பதி சமேதராக வந்தனர். ரோஜா பூ மாலை மட்டுமே அவர்களின் கழுத்தில் இருந்தது. புதுமண தம்பதியருக்கான எந்த வித அலங்காரமோ அடையாளமோ அவர்களுக்கு இல்லை. சாதாரண மஞ்சள் கயிற்றை கார்த்திகாவின் கழுத்தில் கட்டினார். நாதஸ்வர மேளமில்லை. பெரிய அளவில் சொந்த பந்தங்கள் யாருமின்றி எளிமையான திருமணமாக நடைபெற்றது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற வேம்படி இசக்கி அம்மன் கோவிலில் நடந்த இந்த காதல் திருமணத்தை அவ்வழியே சென்ற பொது மக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர். காதல் திருமணம் என்றாலும் இத்தனை எளிமையாக எங்கும் நடந்திருக்காது என்றும் பேசிக்கொண்டனர். காதல் திரைப்படத்தில் மேன்சன் வாசலில் இருந்த கோவிலில் அவசரமாக தாலி கட்டி திருமணம் செய்வார்கள். அதை விட வேகமாக தூத்துக்குடியில் நடந்து முடிந்துள்ளது இந்த திருமணம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.