கருங்காலக்குடியில் புதிய பள்ளிவாசல் திறப்புவிழா!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி ஊராட்சி பேட்டை பகுதியில் ஒரு பள்ளிவாசல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக அந்தப் பள்ளிவாசலின் இடத்திலிருந்து 13 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள இடத்தில் பள்ளிவாசல் கட்ட முடிவு செய்து கட்டிடப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாகத் துவங்கப்பட்டது. பொதுமக்களின் பொருளாதாரப் பங்களிப்புடன் நடைபெற்ற இப்பள்ளிக் கட்டிடப் பணிகள் சமீபத்தில் நிறைவுற்றது.
மஸ்ஜிதுல் அக்சா எனப் பெயரிடப்பட்ட அந்தப் பள்ளிவாசலின் திறப்பு விழா பெரும் விமரிசையாக நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பேட்டை ஜமாத் தலைவர் இப்ராகிம்சா தலைமை வகிக்க, ஜமாத் செயலாளர் முகமது காசிம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலதிபர் அப்துல் ஜலீல் பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.
அதன் பின்னர், வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை பள்ளி தலைமை இமாம் நடத்தினார். அதனை தொடர்ந்து உலகமக்கள் அனைவரும் நோய் நொடியின்றி சகோதர வாஞ்சையோடு, ஒற்றுமையுடன் வாழ சிறப்பு மிக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர்கள் நூர்தீன், அப்துல் அஜிஸ், ஜபார், பக்கீர் முகமது, முகம்மது ரபீக், மருத்துவர்கள் அம்சத் அலி, முகமது இஸ்மாயில், கருங்காலக்குடி கிராமத்தின் தலைவர் வழக்கறிஞர் ராசேந்திரன், கிராமத்தின் நிர்வாகிகள் மோகன், சண்முகவேல், ராசேந்திரன் ஆகியோர் உட்பட இவ்விழாவில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்குபெற்று சிறப்புச் செய்தனர். இப்பகுதி மக்கள் எவ்வித மதவேறுபாடுகளும் இன்றி அண்ணன் – தம்பிகளாய், மாமன் – மச்சான்களாய் ஒன்றிணைந்து வாழ்ந்து வருவதற்கான சான்றாக இவ்விழா நடைபெற்றது என்றால் மிகையாகாது. சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பலதரப்பு மக்களும் உற்சாகத்துடனும், தங்களது பள்ளிவாசல் எனும் உரிமையுடனும் பங்கேற்றது மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சமுதாய மக்களும் திரண்டு வந்து பள்ளிவாசலைப் பார்வையிட்டு, விழாவில் முழுமையாகப் பங்கேற்று, இறுதிவரை கலையாமல் இருந்து தங்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாட்டினர்.
ஜமாத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முத்தலிபு மற்றும் ஷாஜகான், கட்டுமானக் குழு நிர்வாகிகள் முகமது முபாரக், பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவின் இறுதியில் நடைபெற்ற பிரம்மாண்டமான விருந்திலும் அனைவரும் கலந்துகொண்டு, ஒருவரை ஒருவர் சகோதர வாஞ்சையுடன் கட்டியணைத்து விடைபெற்றுச் சென்றனர்.
இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொட்டாம்பட்டி காவல்துறையினரும், போக்குவரத்தை ஒருங்குபடுத்தும் பணிகளை மேலுர் போக்குவரத்துக் காவல்துறையும் சிறப்பாகக் கையாண்டனர். உளவுத்துறை அதிகாரிகளும் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். 5000 பேருக்கு மேல் கூடிக் கலைந்த இவ்விழாவில் சிறு சலசலப்புகள் கூட இல்லாமல் முழுக்க முழுக்க கொண்டாட்ட நிகழ்வாகவும், மதநல்லிணக்க நிகழ்வாகவும் அமைந்தது நிகச்சியின் சிகரமாக அமைந்தது. இந்திய தேசத்திற்கே வழிகாட்டியாக இந்நிகழ்வு அமையப்பெற்றது இப்பகுதி மக்களின் ஒற்றுமைக்கு மற்றுமோர் சான்றாக உள்ளது. ஏற்கனவே கோவில் திருவிழாக்கள், தர்காக்களின் கந்தூரிகள் மற்றும் சந்தன உரூஸ் நிகழ்ச்சிகள் இப்பகுதி மக்களை மதநல்லிணக்கத்துடன் பிணைத்து வைத்திருப்பதுடன், இந்நிகழ்வும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாக மின்னுவதில் வியப்பில்லை.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியின் இறுதியில் பேட்டை ஜமாத் பொருளாளர் முகமது ரியாஸ் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– மதுரை வெண்புலி.