சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை கிராமத்தில் கடந்த 1956ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கான சிறிய பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பள்ளிவாசல், 1976ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்தக் கட்டிடம் 46 ஆண்டுகளை கடந்த நிலையில் புதிய பள்ளிவாசல் கட்டிடம் கட்ட கிருங்காக்கோட்டை முஸ்லிம் ஜமாத்தார்களால் முடிவு செய்யப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்ட கட்டிடப் பணிகள் நிறைவடைந்து நேற்று புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அதிகாலைத் தொழுகைக்கு முன்னதாக கிருங்காக்கோட்டை ஜமாத்தில் வயது முதிர்ந்தவரும், தொழிலதிபருமான பகர்தீன் ரிப்பன் வெட்டி பள்ளிவாசலை திறந்து வைத்தார்.
அதன்பின்பு காலை 9 மணியளவில் துவங்கிய நிகழ்ச்சிகளுக்கு கிருங்காக்கோட்டை ஜமாத் தலைவர் முகமது மீரா தலைமை தாங்கினார். ஜமால் முகமது மற்றும் சிங்கம்புணரி ஜமாத்தலைவர் ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ‘இஸ்லாம் என்பது மதம் மட்டுமில்லாமல் மார்க்கமாக நல்வழியை போதிப்பதும், ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதே. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதற்கு எடுத்துகாட்டாக கோடீஸ்வரனும் குடிசையில் இருப்பவனும் பள்ளிவாசலில் சமமாக தொழுகை செய்வார்கள்’ எனப் பேசினார். அதன் பின்பு நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையில் உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக அமைந்த இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, மத வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் மற்றும் கிருத்துவர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் சாந்தி, கிருங்காக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அகிலா கண்ணன் மற்றும்
துணைத்தலைவர் அமுதா சண்முகம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராசியப்பன், ஜோதி அம்பலம், சிங்கம்புணரி பேரூராட்சி மன்றத் தலைவர் அம்பலமுத்து மற்றும் துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், நகர அவைத்தலைவர் சிவக்குமார், சிங்கம்புணரி நகர செயலாளர் கதிர்வேல், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், குடோன்மணி மற்றும் கர்ணன் தலைமையிலான பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மதியம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்திலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருங்காக்கோட்டை முஸ்லிம் ஜமாத்தினர் மற்றும் இளைஞரணியினர் இணைந்து வெகு சிறப்பாகச் செய்திருந்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.