சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியின் அலுவலகக் கட்டிடம் 1950ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது.
தற்போது சிங்கம்புணரி நகர் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், நகரின் எதிர்கால வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு அதற்கேற்ப தொலைநோக்குப் பார்வையோடு பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தற்போது அலுவலகம் இருக்கும் இடத்தில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், தற்போதைய இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட விதிகளின்படி போதிய அளவு இடம் இல்லாத காரணத்தால், புதிய கட்டடத்திற்கு அங்கீகாரம் தர வாய்ப்பிருக்காது என நேரில் தெரிவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு சொந்தமான சீரணி அரங்கம் அமைந்துள்ள இடத்தில் போதுமான இட வசதி இருக்கும் என்று தெரிய வந்ததால் அந்த இடத்தில் பேரூராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்தை கட்டுவது குறித்து அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினரை அழைத்து அனைத்து கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சீரணி அரங்கில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் முடிவை அனைவரும் ஏக மனதாக ஆதரித்து கையெழுத்திட்டனர்.
ஆனால், அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில அரசியல் கட்சியினர் உள்பட சிலர் சீரணி அரங்கம் இடத்தை முழுமையாக பேரூராட்சி கைப்பற்ற நினைப்பதாகவும், அதனால் அந்த இடத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் எருதுகட்டு உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் பாதிக்கப்படும் எனவும் கூறிய கருத்துக்கள், பொதுமக்களிடையே பேசு பொருளானது.
அதனையொட்டி சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது ஆகியோரை நாம் சந்தித்தபோது அவர்கள், ‘சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட முதலில் கண்டாகுளம் முன்புறம் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் பழைய அலுவலக இடம் மற்றும் நல்லாகுளம் முன்புறம் உள்ள ஒரு இடம் மற்றும் நாவிதன் ஊரணி அருகில் உள்ள ஒரு இடம் ஆகிய இடங்களை உத்தேசித்தபோது அவையனைத்தும் நீர் நிலை புறம்போக்கு எனத் தெரிய வந்ததால் அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது.
அதேபோல, துப்புரவுப் பணியாளர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தந்து விட்டு, தற்போது அவர்கள் வசித்து வரும் இடத்தில் பேரூராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்தை கட்ட இயலுமா என்று ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த இடம் ஆதிதிராவிடர் குடியிருப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த இடத்தை பேரூராட்சி அலுவலக கட்டடத்திற்காக கையகப்படுத்த இயலாது எனத் தெரிய வந்தது.
அதன்பின்பு என்.ஜி.ஓ காலனி இருந்த இடத்தில் கட்ட இயலுமா என ஆலோசிக்கப்பட்டபோது அந்த இடம் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்திலும் பேரூராட்சி கட்டிடம் கட்ட இயலாது எனத் தெரியவந்தது.
இதனையடுத்து, தற்போது சீரணி அரங்கம் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது, 1.68ஏர்ஸ் – 4.14 ஏக்கர் அளவுள்ள அந்த சர்வே எண்ணில் ஏற்கனவே ஐயப்பன் கோவில், தென் சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம், துணை சுகாதார நிலையம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, அஞ்சல் நிலையம், பஜனை மடம், சிங்கம்புணரி நூலகம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி எண் 1 மற்றும் சீரணி அரங்கம் உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. அதில் சீரணி அரங்கம் அமைந்துள்ள பகுதி மட்டும் சுமார் 50சென்ட் இடமாகும். இந்த இடத்தில் தற்போது பேரூராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு சுமார் 8 சென்ட் இடம் மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கிறது. மீதமுள்ள 42 சென்ட் இடத்தில் புதிதாக சீரணி அரங்க கட்டிடம் அமைத்துத் தரப்படும். இரண்டு கட்டிடங்களின் வடக்குப்புறம் மீதமாக உள்ள இடம் திறந்த வெளியாகவே இருக்கும். எனவே, பாரம்பரியமாக அந்த இடத்தில் நடத்தப்படும் எருதுகட்டு போன்ற எந்த நிகழ்வையும் வழக்கம்போல் தொடர்ந்து நடத்திக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்தனர். மேலும் ‘புதிய அலுவலகம் மற்றும் சீரணி அரங்க கட்டிடம் ஆகிய இரண்டு கட்டிடங்களின் மேல் தளத்தில் கல்லூரி மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக படிப்புக்கூடம் ஒன்றும் அமைத்துத் தரப்படும். இது எல்லாம் அறிந்தும் சிலர் வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக, உள்நோக்கத்துடன் தவறான கருத்துக்களை பொதுமக்களிடையே பரப்பி வருகிறார்கள்’ எனவும் தெரிவித்தனர்.
மேலும், இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்திலும் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, சீரணி அரங்கம் அமைந்துள்ள இடத்தில் பேரூராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர் பாலமுருகன் மூலமாக செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று நீதிப்பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– பாரூக் & ராயல் ஹமீது.