நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் ஆஷிஷ் ராவத். முக்கிய ஆலோசனைகளுக்காக செல்லும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களை மதிப்பதில்லை, நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது, அவர்களை ஒருமையில் பேசுவது என இவர் மீது பல்வேறு புகார்கள் காவல்துறை தலைமைக்கும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பழங்குடியினருக்கு என தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த நீலகிரி காவல்துறையின் வாகனங்களை விதிகளை மீறி இவர் தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாகவும், அந்த வாகனங்களுக்கான எரிபொருள் செலவை காவல்துறை கணக்கில் இருந்தே எடுத்துக் கொள்வதாகவும் இவர் மீது எழுந்த குற்றச்சாட்டு, அரசின் கவனத்திற்குச் சென்றது.
இந்நிலையில் நேற்று இரவு 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் பணியிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருப்பது நீலகிரி மாவட்ட மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
– பாரூக்.