மதுரையின் நுழைவாயிலான ஒத்தக்கடையில் சுகாதாரச் சீர்கேடு! ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்! நோய்கள் பரவும் அபாயம்!
உலகின் தொன்மையான நகரங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் மிகச் சில நகரங்களில் மதுரையும் ஒன்று. தமிழனின் 2500 ஆண்டுகால வைகைக்கரை நாகரீகத்தை உலகிற்கு உணர்த்தும் கீழடி, மதுரையிலிருந்து தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.
அப்படிப்பட்ட மதுரைக்கு திருச்சியிலிருந்து வருபவர்களுக்கு மதுரையின் நுழைவாயிலாக இருக்கும் யானமலை ஒத்தக்கடை சாலையும், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் யானைமலைக்குப் போட்டியாக குப்பைகள் கொட்டப்பட்டு, உயர்ந்திருப்பது மட்டுமல்லாது, தினந்தோறும் அக்குப்பைகளை தீயிட்டுக் கொளுத்தவும் செய்கின்றனர். இதனால் ஏற்படும் புகை மண்டலமானது அப்பகுதியில் சாலை முழுவதையும் புகைக் காடாக மற்றுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த சாலை சந்திப்பை கடக்க இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறுகள் பரிசாகக் கிடைக்கின்றன.
இந்தப் புகை மண்டலத்தில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளின் கண்களுக்குப் புலப்படாமல் இருப்பதால் விபத்துகளும் அதிகரிக்கின்றது. இங்கு நடைபெறும் விபத்துகளால் மனித உயிர்கள் இவ்விடத்தில் பலியாவது அன்றாட நிகழ்வாகவும் மாறி வருகின்றது. இந்தக் குப்பை மேட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் மேனாள் முதல்வர் செயலலிதா, இன்றைய முதல்வர் ஸ்டாலின், மற்றும் சீமான், கமலஹாசன் ஆகியோர் தங்களின் கட்சி மாநாடுகளை நடத்தியுள்ளனர். மேலும் இந்த இடமானது இன்றைய தமிழக அமைச்சரவையில் முதல்வர் குடும்பத்தின் மிக நெருங்கிய வட்டத்திற்குள் இருப்பவரும், மிக அதிகமான செல்வாக்கு மிகுந்த தமிழக அமைச்சர்களில் ஒருவருமான மூர்த்தி அவர்களின் மதுரை கிழக்குத் தொகுதிக்குள் வருகின்றது. அப்பகுதி வழியாக வந்த பெயர் குறிப்பிட விரும்பாத வாகன ஓட்டி ஒருவர், அந்த இடத்தை நிழற்படம் எடுத்த நமது செய்தியாளரிடம், ‘தன் சொந்தத் தொகுதியை குப்பைமேடாக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் எதை சாதிக்கப்போகின்றார், அமைச்சர்?’ என மனம்வெறுத்துக் கூறினார்.
இதுகுறித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை கிழக்கு ஒன்றியச் செயலாளர் நாசா அலாவுதீன் கூறியதாவது, இந்த இடம் மட்டுமல்ல, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் குடியிருப்புகளின் அருகில் உள்ள வளர்நகர் – பாண்டி கோவிலுக்கு இடைப்பட்ட பகுதியிலும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இதுபோன்ற குப்பை மேடுகள் உள்ளது. இந்த குப்பை மேடுகளில் நெகிழிக் குப்பைகளும் சேர்த்து எரியூட்டப்படுகின்றது. இப்படி நெகிழியை எரிக்கும் போது உருவாகும் புகையை சுவாசிப்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த குப்பை மேடுகள் பற்றி தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் தங்களின் இயக்கத்தின் சார்பில் புகார் தர இருப்பதாகவும், 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி போராட இருப்பதாகவும் கூறினார். எது எப்படியோ மதுரைக்குத் தூங்கா நகர் எனும் பெயர் ஏற்பட்டது என்பதை நமது தலைமுறை அறிந்துகொள்வதற்காகவே தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிட்டு மக்களின் தூக்கத்தைக் கெடுக்கும் செயலில் ஈடுபடுகின்றனவா என பொதுமக்களுக்கு அய்யம் ஏற்பட்டுள்ளது.
மதுரை, தமிழனின் தொன்மையைப் பறைசாற்றும் தொட்டிலா? நோய்களைப் பரப்பும் கட்டிலா? எனவும் சமூக ஆர்வலர்களுடைய கேள்வி எழுந்துள்ளது.
மதுரையின் தொன்மையைப் போற்றுவோம், மக்களின் உயிர்களைக் காப்போம் என்ற முழக்கத்தை ஒத்தக்கடை மக்கள் எழுப்பத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– மதுரை வெண்புலி.