சிங்கம்புணரி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா!!
இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25ஆம் தேதி, நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.
அதன்படி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 13ஆவது தேசிய வாக்காளர் தினம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி, முனைவர் மார்கரெட் பாஸ்டின் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் சாந்தி கலந்து கொண்ட மாணவ மாணவியரிடையே பேசிய போது ஒவ்வொருவரும் வாக்களிப்பதையும், 100% வாக்குப்பதிவின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் அவர்களிடையே வாக்காளர்களுக்கான உறுதி மொழியை வாசித்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நடனம், நாடகம், பேச்சுப்போட்டி மற்றும் பாடல்கள் ஆகிய அனைத்து வடிவங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தி வாக்களிப்பதன் அவசியத்தை மாணவிகள் வலியுறுத்தினர். இவ்விழாவில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளில் வென்ற சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, சிங்கம்புணரி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் தரப்பட்டது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் 100% சிறப்பாக செயல்பட்ட உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தேசிய ஊரக வேலைத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இவ்விழாவில் மூத்த வாக்காளர்கள் மூன்று பேர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக, துணைவட்டாச்சியர் சிவராமன் நன்றியுரை கூறினார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.