2 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்தால் குப்பைகள் கொட்டப்பட்டது. பின்னர் அப்பகுதி இளைஞர்களின் போராட்டத்தால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகப்படியான அளவில் மருத்துவக் கழிவுகள், பல்வேறு இரசாயனக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டன.
இந்நிலையில், கோமஸ்புரம் பகுதியிலுள்ள உப்பாற்று ஓடை முழுவதும் இளஞ்சிவப்பு நிற இரசாயனக் கழிவுநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் உப்பாற்று ஓடை முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி நிலத்தடி நீர் முழுவதுமாக நஞ்சாக்கப்பட்டு, அந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு நேரடியாக பல்வேறு நோய்கள் வர காரணமாகிறது. மேலும் அந்த இரசாயனக் கழிவுகள் கலந்த நீரை எடுத்து உப்பளங்களில் உப்பு தயாரிக்கப்படுகிறது. அந்த உப்பை பயன்படுத்தும் மக்கள் பெரும் வியாதிகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
மேற்படி இரசாயனக் கழிவுநீர் கடலில் கலப்பதால் அனைத்து கடல்நீர் உயிரினங்களும், அதனை உண்ணும் அனைத்து மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுகிறோம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட மீன் கம்பனிகள் இயங்கி வருகின்றன. அங்கிருந்து கழிவுகள் ஓடையில் கலக்கப்படுகிறதா? என அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றன. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட னர். சுத்திகரிக்கப்படாமல் உப்பாற்று ஓடையில் விடும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.