எதிர் வரும் பிப்ரவரி 17 அன்று நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் “வாத்தி”. இப்படத்தின் பெயர் ஆசிரியர்களை அவமதிப்பதாக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சமீபகாலமாக ஆசிரியர்களை பொதுவெளியில் அவமதிக்கும் செயல் அதிகரித்து வருகிறது. வருங்கால சமுதாயத்தை கட்டமைக்கும் இடமாக பள்ளிகள் விளங்குகின்றன. மாணவர்களுக்கு அறிவூட்டும் இடமாக மட்டுமல்லாமல் ஒழுக்கம், சமூக பண்புகளை வளர்க்கும் இடமாகவும் பள்ளிகள் விளங்குகின்றன.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சமீப காலமாக பல்வேறு காரணங்களால் ஆசிரியர் மாணவர் உறவு பாதிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் பள்ளி மாணவர்களே ஆசிரியர்களை கேலி செய்வதோடு மட்டுமல்லாமல் வரம்பு மீறி செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் சமூகத்தை சீர் செய்வதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பல்வேறு சமூக வலைத்தளங்களால் மாணவர்களின் நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய மிகப்பெரிய காட்சி ஊடகமான திரைப்படங்களில் ஆசிரியர்களை காமெடியாக்கி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றனர். தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் போக்கை இச்சமூகத்திற்கு கற்று தர வேண்டிய திரைப்படங்கள் அந்த நிலையில் இருந்து மாறி செல்வது வருத்தத்துக்கு உரியதாகும்.
இந்நிலையில் வருகிற பிப்ரவரி 17 அன்று நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படத்திற்கு “வாத்தி” என்று பெயரிடப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களை கேலிப் பொருளாக்கும் நிலை ஏற்படும். இது ஆசிரியர்களின் தன்மான உணர்வை காயப்படுத்துவதாக உள்ளது. எதிர்கால இந்தியாவை கட்டமைக்க உள்ள தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை “ஆர்” விகுதி சேர்க்காமல் பெயரிட்டிருப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது.
இது இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும். படத்தின் தயாரிப்பாளர் உடனடியாக தமிழில் வெளியாக உள்ள படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்வதாக’ கூறப்பட்டுள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.