தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அனல்மின்நிலைய தலைமை செயற்பொறியாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது என்று கூறியிருந்தார். இதுகுறித்த விசாரணையின் அடிப்படையில், அனல்மின் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று போராட்டக் குழுவை சேர்ந்த அப்பாத்துரை, ரசல், பேச்சிமுத்து ஆகியோர் தலைமையில் அனல் மின்நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் 5-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
– முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.