ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. கட்சியின் வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில், இதுவரை 10 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே, 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் 11வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோட்டின் வெற்றியை கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம் திவான் சாபுதூர் ஊராட்சியில், தமிழக கேரளா எல்லை பகுதியான மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும், அவ்வழித்தடத்தில் வந்த வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் லட்டு, ஜிலேபி உள்ளிட்ட இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கி உற்சாகம் பொங்க கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், திவான்சாபுதூர் கிளைச் செயலாளர் ராசு என்கிற ராஜகாளியப்பன், ஆனைமலை வடக்கு ஒன்றிய பொருளாளர் அருணகிரி, திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கலைவாணி சிலம்பரசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணகுமார், 3ஆம் வார்டு உறுப்பினர் தரணிப்பிரியா தியாகராஜன், இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ் குமார், ஒர்க் ஷாப் சிவா, அறங்காவலர் குழு திருமுருகன், மீனாட்சிபுரம் கிளைச் செயலாளர் அப்புசாமி, வாழக்கொம்பு மாரிமுத்து,கணபதி பாளையம் சிலம்பரசன் மற்றும் கழக உடன்பிறப்புகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-M.சுரேஷ்குமார்.