சமவெளி பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், மக்கள் குளு, குளு சீசன் நிலவக்கூடிய இடங்களை தேடி சென்று வருகிறார்கள். அந்த வகையில் குளு, குளு சீசன் நிலவி வரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
நீலகிரிக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து தான் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 2 சாலைகள் செல்கிறது. ஒன்று குன்னூர் வழியாகவும், மற்றொன்று கோத்தகிரி வழியாகவும் செல்கிறது.
இந்த 2 சாலைகளையும் நீலகிரி மக்கள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், இந்த 2 சாலைகளிலும் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும். தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் மாவட்ட காவல்துறை போக்குவரத்து மாற்றமும் செய்துள்ளது.
அதன்படி கோத்தகிரியில் இருந்து கீழே வரும் வாகனங்கள், ராமசாமி நகர், ஊமைப்பாளையம், மச்சினாம்பாளையம் பகுதி வழியாக மேட்டுப்பாளையம் வந்து, பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்லலாம்.
இதேபோன்று, குன்னூர் மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் சிறுமுகை சாலையில் தென்திருப்பதி நால்ரோடு வழியாக வந்து, அந்தந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் மாற்றுப்பாதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் இன்று சனிக்கிழமை வாரவிடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் நீலகிரிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர்.
இதனால் காலை 7 மணி முதலே மேட்டுப்பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர். போக்குவரத்து நெரிசலால் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஜடையாம்பாளையம் புதுமார்க்கெட் வரை 6 கி. மீ வரையும், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் குட்டையூர் வரை 4 கி. மீ வரையும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நின்ற இடத்தை விட்டு நகராமல் அப்படியே நிற்பதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் காருக்குள்ளேயே இருக்கும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
இதுதவிர மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ், ஊட்டி செல்லும் சாலைகள் மிகவும் குறுகலான சாலை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.