காரைக்குடி அருகிலுள்ள சின்னமாத்தூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பள்ளியில் 11பேர் மட்டுமே கல்வி பயின்றனர்.
அந்தப் பள்ளியில் சிறந்த முறையில் கல்வி கற்றுக்கொடுப்பதை அறிந்த தமிழக மக்கள் மன்ற நிர்வாகிகள், தங்களின் குழந்தைகளோடு சேர்த்து காரைக்குடி நகரத்தில் உள்ள குழந்தைகள் 15 பேரையும் இங்கு சேர்த்துவிட்டனர். இதன் மூலம் அந்தத் துவக்கப் பள்ளியில் தற்போது 35 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் இங்கு கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளும் செய்துவந்தனர். காரைக்குடி நகரத்திலிருந்து 8கி.மீ தூரத்திலுள்ள இந்த கிராமப்பள்ளிக்கு தினந்தோறும் சென்று வருவதற்கு மாணவர்கள் சிரமப்படுவது தமிழக மக்கள் மன்றத்தினர் கவனத்திற்கு வந்தது. மாணவர்களின் சிரமத்தை களைய, முனைந்து செயல்பட்ட தமிழக மக்கள் மன்றத்தினர் ₹8.5இலட்சம் மதிப்பிலான மாணவர்கள் பயணிக்கும் வாகனம் ஒன்றை சின்னமாத்தூர் அரசு துவக்கப்பள்ளிக்கு நேற்று வழங்கினர்.
அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரிடம் வழங்கப்பட்ட அந்த பள்ளி வாகனத்தை, தமிழக மக்கள் மன்றத்தின் துணைத்தலைவர் ஆரோக்கியம் தொடக்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணைக் கல்வி அலுவலர் சண்முகநாதன், தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி நன்றி தெரிவித்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
தமிழ்நாட்டிலேயே அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் பயணிக்க இலவச வாகனம் வழங்கப்பட்ட ஒரே துவக்கப்பள்ளி, சின்னமாத்தூர் அரசு துவக்கப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
– பாரூக், சிவகங்கை.