தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக 56 வயதான லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தாமிரபரணி ஆற்றோரங்களில் மணல் கடத்தல் அதிகமாக நடப்பதாக தொடர்ச்சியாக வந்த புகாரையடுத்து இரவு நேரங்களில் ரோந்து செல்ல ஆரம்பித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் ரோந்து செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரியை பார்த்தவுடன் ஆற்று மணல் மூட்டைகளை அப்படியே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதியாமலும், எந்த நடவடிக்கை எடுக்காமலும் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை கிராம நிர்வாக அலுவலகத்தில் லூர்து பிரான்சிஸ் பணியாற்றிக் கொண்டிருந்த போது 2 பேர் அரிவாளுடன் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்று கேட்டு ஆக்ரோஷத்துடன் பிரான்சிஸ் மீது அரிவாளுடன் பாய்ந்த அவர்கள், சரமாரியாக அவரை வெட்டிச் சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலைச் சம்பவத்தை பார்த்ததும் அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முறப்பநாடு காவல்துறையினர், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த கிராம நிர்வாக அலுவலரை,
நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவம் தொடர்பாக கலியாவூர் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனோடு தொடர்புடைய மாரிமுத்து என்பவரையும் தேடி வருகின்றனர்.
நேர்மையான கிராமநிர்வாக அலுவலர் என பெயர் எடுத்த லூர்து பிரான்சிஸ் ஏற்கெனவே சமூக விரோத கும்பல்களால் பலமுறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்காக வருவாய்த்துறை மூலமாக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்றன.
இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு அரசு நிலங்களை முறையாக அளவிட்டு கையகப்படுத்தும் பணிகளில் கிராமநிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் திறம்பட செயல்பட்டார். அப்போது அருங்காட்சியகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட சில ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அரசிடம் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை கையகப்படுத்திய பிரான்சிஸை மிரட்டும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு நேர்மையாகவும், தைரியமாகவும் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தனது பணிகளை செய்து வந்த லூர்து பிரான்சிஸ், தற்போது மணல் கடத்தல் குண்டர்களால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மணல் கொள்ளையர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், அரசு அலுவலர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க நேர்மையுடன் போராடிய கிராமநிர்வாக அலுவலர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பணியிலிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும், மணல் கடத்தல் தொடர்பாக லூர்து பிரான்சிஸ் புகார் கொடுத்தும் வழக்குப் பதிவு செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் பாஸ்கரன் தலைமையேற்றார் . செயலாளர் பாண்டிச்செல்வம் முன்னிலை வகித்தார். 15க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.