வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகிலிருக்கும் ‘ஜான்ரஸ்’ என்ற ‘சாத்கர்’ மலைக்குள் வற்றாத நீரோடைகளும், சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இதனால், சட்டவிரோத மாஃபியா கும்பல்கள் சாத்கர் மலைப் பகுதியை ஆக்கிரமித்து, சாராய அடுப்புகளைப் பற்றவைத் திருக்கின்றன.
சாத்கர் மலையில், திரும்பிய பக்கமெல்லாம் புகையும் அடுப்புகளும், ஊறல் வடிக்கும் பேரல்களும்தான் காணப்படுகின்றன. வெளியாட்கள் யாரும் அவ்வளவு எளிதாக ஊடுருவவோ, கண்காணிக்கவோ முடியாத அளவுக்கு இந்த மலைப் பகுதியை தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது சாராய கும்பல். “போலீஸ் படை மலைப் பகுதியின் எந்த மூலையிலிருந்து ஏறினாலும், உடனே சாராயக் கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்து ‘விசில்’ சத்தம் பறக்கும். சத்தம் வரும் திசையை போலீஸார் அண்ணாந்து பார்க்கும் அடுத்த விநாடியே மொத்தக் கும்பலும் தப்பி விடுகிறது.
ஒவ்வொரு முறையும் ரெய்டுக்குச் செல்லும் போலீஸார், பல்லாயிரம் லிட்டர் சாராய பேரல்களை அடித்து நொறுக்கிவிட்டு வருகிறார்கள். ஆனாலும், சாராய மாஃபியாவிடமிருந்து சாத்கர் மலையை மீட்க முடியவில்லை. கடந்த ஆண்டு, ஜூலை மாதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடியாகச் சாராயத் தடுப்பு வேட்டைக்குப் புறப்பட்டார். மலை ஏறிய ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுக்கும்விதமாக சாராயக் கும்பல்கள் பாறாங்கற்களைத் தள்ளிவிட்டுத் தப்பின. ஆட்சியருக்கே இந்த நிலைதான்” என்று போலீஸாரே சொல்கிறார்கள்.
இந்த நிலையில், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி மற்றும் வேலூர் எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் 100 போலீஸார், இன்று காலை சாத்கர் மலைப் பகுதியை சுற்றிவளைத்தனர். மலைக்குள் அமைந்திருக்கும் டங்காபள்ளம், பன்னிக்குட்டிபள்ளம், நீர்முல், பால்சுனை, டோபிப் பாறை, கடம்பப் பாறை உள்ளிட்ட இடங்களில் ‘ட்ரோன்’ கேமராவையும் பறக்கவிட்டு சாராய அடுப்புகளையும், ஊறல் வடிக்கும் பேரல்களையும் கண்டுபிடித்து அழித்தனர்.
சுமார் பத்தாயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளையும் தீயிட்டு எரித்தனர். இந்த ரெய்டில், சாராயக் கும்பலைச்சேர்ந்த 3 பேர் பிடிபட்டிருக்கிறார்கள். ‘‘இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் டி.ஐ.ஜி முத்துசாமி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன்.