மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டி பகுதியில் உள்ள புலிமலையில் கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி தலைமையில் பாண்டியராஜன், அறிவுச்செல்வன், மணிகண்டன் உள்ளிட்ட வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழுவினர் தொல்பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இங்குள்ள குகையில், 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல் பழங்குடி மக்களின் வாழ்க்கையை குறிக்கும் வகையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என சிவப்பு நிறங்களால் ஆன 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியத்தில் தனித்தனியாக நிற்கும் மனிதனும், அம் மனிதனின் கால்களின் அருகே விலங்குகளும் வரையப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஓவியங்களுக்கு அருகே வட்டம், நட்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளும் காணப்படுகின்றது. ஏற்கனவே மதுரையில் ஆறு இடங்களில் சிவப்பு நிறங்களில் கண்டறியப்பட்ட ஓவியங்கள் வரிசையில் இவையும் புதிதாக இணைய உள்ளன. இவை கோட்டூருவமாகவும், செஞ்சாந்து உருவமாகவும் மிகவும் உயரமான உருவம் கொண்ட மனிதன் உருவங்களுமாக உள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குகை 10 நபர்கள் தங்கும் அளவிற்கான அளவு கொண்டதாக காணப்படுகிறது.
புலி மலை சொரசொரப்பான செங்குத்து மலையாக இருப்பதால் ஆய்வாளர்கள் பாதுகாப்பான முன்னேற்பாடுடன் சென்று ஆய்வு செய்தனர். தமிழகத்தை பொறுத்தவரை சிவப்பு பாறை ஓவியங்கள் 500 வருடங்கள் பழமையானவை என அனுமானமாக கருதப்படும் நிலையில், இப்பாறை ஓவியம் குறித்த சரியான காலகட்டத்தை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக தொல்லியல் துறையுடன் இணைந்தோ அல்லது புலிப்பட்டி ஊரை சேர்ந்த ஜனநாயக வாழ்வுரிமை சங்கத்துடனோ இணைந்து, பாறை ஓவியங்களின் காலத்தை கணிக்க உதவும் கார்பன் 14, தெர்மோ லூமினசன்ஸ், ஆப்டிகலி ஸ்டிமுலேட்டடு லூமினசன்ஸ் அல்லது யுரேனியம் தோரியம் வகை ஆய்வினை செய்ய முடிவு செய்துள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.
– மேலூர், தமிழரசன்.