கோவை மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்கள் கருத்தடை மையம் இயங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் வாகனங்களில் செல்பவர்களையும் நடந்து செல்லும் பாதசாரிகளையும் தெரு நாய்கள் துரத்துவதாக பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் நாய்கள் கருத்தடை மையம் துவங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து உக்கடம் பகுதியில் நாய்கள் கருத்தடை மையத்தை இன்று துவக்கி உள்ளனர். இங்கு கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்நிலையில் உக்கடம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள நாய்கள் கருத்தடை மையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டு வரும் நாய்கள் இங்கு கருத்தடை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்ட பிறகு பிடிக்கப்பட்ட இடத்திற்கே கொண்டு சென்று விடாமல் இங்கேயே விட்டு விடுவதாகவும் இதனால் இப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரிக்க கூடும் என தெரிவித்தனர். மேலும் நாய்களால் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் எனவும் குழந்தைகளுக்கும் ஆபத்தாக இருக்கக்கூடும் என தெரிவித்தனர்.
எனவே இம்மையத்தை ஊரகப் பகுதியில் எங்கேனும் துவக்கி கொள்ளுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிமேலும் இங்கு இம்மையம் செயல்பட்டால் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர். பொதுமக்களின் இந்த எதிர்ப்பால் அப்பகுதியில் நாய்கள் கருத்தடை மையம் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.