சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்பவரது மகன் குணசேகரன் (வயது 22).
மதுரை மாவட்டம், சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பெரியைய்யா மகன் அருண்குமார்(27). குணசேகரன் மற்றும் அருண்குமார் இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.
சிங்கம்புணரி சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், நண்பர்கள் இருவரும் நேற்று இரவு திருவிழாவில் கலந்து கொண்டு, குணசேகரனின் ஊரான ஆலம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளனர்.
அரணத்தங்குண்டு அருகே செல்லும்போது வழியில் குறுக்கே வந்த மாட்டின் மீது வேகமாக மோதியதில் இருவருக்கும் தலையிலும், கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக இருவரும் சிங்கம்புணரி அரசினர் தாலுகா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குணசேகரன் உயிரிழந்தார்.
அருண்குமார் பலத்த காயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.