அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருந்த மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த 2018ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதால் அதுகுறித்து வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, ‘அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்திதான் என்றும், ஆதாரம் ஏதும் இல்லை எனவும், பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டதற்கு ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை’ என்றும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எச்.ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதற்கு பதிலளித்து அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எச்.ராஜாவின் விமர்சனம் தனிப்பட்ட மனிதர் குறித்த விமர்சனம் கிடையாது. அனைத்து மனிதர்களையும் சார்ந்த விமர்சனம். பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளார். மேலும் அவர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்குத் தொடர முடியும் என்றும் சுட்டிக்காட்டி, வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து, மூன்று மாதத்திற்கு விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் எச்.ராஜாவின் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
– பாரூக், சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர்.