கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் வில்லோனி செகண்ட் பகுதியில் நெடுங்குன்றம் என்னும் கிராமம் உள்ளது.
இந்த நெடுங்குன்றம் பகுதியில் சுமார் 70 குடும்பத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வில்லோனி செகண்ட் பகுதியானது, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மாட்டுவண்டி மற்றும் குதிரை வழி பாதையாகும். இந்த பாதையானது, சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் முற்றிலுமாக சிதைந்து பாதையே இல்லாத அளவுக்கு உள்ளது.
இந்தப் பாதையின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு வால்பாறைக்கு வேறு பாதை அமைக்கப்பட்டதால், இந்த பாதையின் பயன்பாடு சிறிது சிறிதாக குறைந்து தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. வில்லோனி செகண்ட் பகுதியில் இருந்து நெடுங்குன்றத்துக்கு சாலை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டு வில்லோனி பகுதியில் இருந்து நெடுங்குன்றத்திற்கு சாலை அமைத்தனர். இந்த சாலை புதுப்பிக்கும் தருவாயில் பாதியுடன் நிறுத்திவிட்டனர்.
மழைக்காலத்தில் பாறைகளின் வழியே அதிகப்படியான மழை நீர் வந்ததின் காரணத்தினால் வேலையை நிறுத்தினார். ஆனால் அதன் பிறகு வேலையை தொடரவில்லை. நெடுங்குன்றம் பகுதியில் பண்டைய கால மக்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர் ஆனால், அவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லை இதனால் பகுதி மக்கள் நடந்தே மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். மேலும் அப்பகுதி மக்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் தொட்டில் கட்டி தூக்கி கொண்டு செல்லும் அவல நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் மின்சார வசதியும் இல்லை தெருவிளக்குகளும் இல்லை. எனவே நெடுங்குன்றம் பகுதிக்கு அடிப்படை வசதிகளான சாலை சுகாதாரம் மற்றும் மின்சார வசதியை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை.
மற்றும்
-திவ்யகுமார், வால்பாறை.