சிவகங்கை மாவட்டம், சூரக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மற்றும் ஆறுகுடிப்பட்டியைச் சேர்ந்த பிரபு இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு, ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று நான்கு மாதங்களாக பிரியாணி மற்றும் மது வாங்கி கொடுத்து, சூரக்குடியில் உள்ள பழைய அடைக்கப்பன் தியேட்டர் அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்து தனித் தனியாக பல முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதுபற்றி அந்தச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
(இந்த நிகழ்வு குறித்த நாளைய வரலாறு செய்தி:
https://www.nalaiyavaralaru.page/2021/11/12.html)
மேலும் இவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவருக்கும் பிணை கிடைக்காமல் தொடர்ந்து சிறையில் இருந்து வந்தனர்.
அவர்கள் இருவரின் மீதான போக்சோ வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கணபதி மற்றும் பிரபு மீதான குற்றம் நிரூபிக்கப்படவே, இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ₹.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரத் ராஜ் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் ₹.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
– பாரூக் & ராயல் ஹமீது.