நடிகை விஜயலட்சுமி புகாரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி குடும்பம் நடத்தியதாகவும், பல முறை பலாத்காரம் செய்து, கர்ப்பத்தை கலைத்து விட்டார் என்றும் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.இந்தப் புகார் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. புகார் கொடுத்தவரிடம் விசாரணை நடத்தவில்லை. குற்றம்சாட்டப்பட்ட சீமானிடமும் விசாரணை நடத்தவில்லை. அதேநேரத்தில் இந்த வழக்கை உயர் அதிகாரிகள் ரத்து செய்யும்படி கூறியுள்ளனர். ஆனால் பின்னர் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீண்டும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில் கடந்த 3 நாட்களுக்கு முன் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள், ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி, புகார் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன்னிடம் சீமான் நெருங்கி பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள், பணப் பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை அளித்து, அவரது வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் காவல் நிலையத்தில் துணை கமிஷனர் உமையாள் நடிகை விஜயலட்சுமியிடம் மீண்டும் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நடிகை விஜயலட்சுமி வீடு திரும்பினார்.ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அதன் தொடர்ச்சியாக, தற்போதைய புகாரின்பேரில், நேற்று சீமான் மீது பெண் வன்கொடுமை, பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் மீண்டும் விசாரிக்க முடிவு செய்தனர். இதன்மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை எந்நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம் என்ற தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், சீமானிடம் விசாரணை நடத்த வளசரவாக்கம், விருகம்பாக்கம், மதுரவாயல் காவல்நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று மாலை சீமானின் பனையூர் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை. அவர் ஊட்டியில் இருப்பது தெரிந்தது. இதனால் தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்தனர். அதற்குள் அவர், கோவை நகருக்கு வந்தது தெரிந்ததால், தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
‘பொய்யான குற்றச்சாட்டு’ கமிஷனரிடம் புகார் விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பாத்திமா பர்ஹானா, தங்கமாரி, சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரே புகார் மனுவை தனித்தனியாக அளித்தனர். அந்த புகார் மனுவில், ‘நடிகை விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் பொய்யான புகாரை 13 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொடுத்துள்ளனர்.
சீமானிடம் இருந்து ரூ.1 கோடி பணத்தை பறிக்கும் நோக்கத்துடன் இந்த பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர் பெலிக்ஸ் கூறுகையில், ‘‘சீமானுக்கும், விஜயலட்சுமிக்கும் திருமணமே நடக்கவில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘போலி’ வீடியோ தயார் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
-மூன்றாம் கண்.