பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பினர் தாக்கியதாக நாடகமாடிய ராணுவ வீரர் நண்பருடன் கைது!

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும், பல தீவிரவாத சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகவும் கூறி பிஎப்ஐ அமைப்பை, ஒன்றிய அரசு கடந்த ஆண்டு தடை செய்தது. மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த பலரும் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, கேரளாவில் இந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இத்தச் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்லம் காவல்துறையினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், இந்திய ராணுவ வீரர் ஒருவரை பிஎப்ஐ அமைப்பினர் தாக்கி, மரத்தில் கட்டி வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதனால் பதறிப்போன காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த ரப்பர் தோட்டத்தில் ஒருவர் மரத்தில் கட்டப்பட்டிருந்தார்.

அவரை விடுவித்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெயர் ஷைன் குமார் என்பதும், அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

மேலும், விடுமுறையில் கேரளா வந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்லத்தில் கடைக்கல் என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்கு சென்ற போது அவர் மீது பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார். அவரின் சட்டையை கிழித்து முதுகில் PFI என மையால் எழுதிவிட்டுச் சென்றதாகவும் கூறினார். இந்தச் சம்பவம் கேரளா மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து, காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால், அதில் சந்தேகப்படும்படியாக யாரும் வரவில்லை. மேலும், கடுமையாக தாக்கப்பட்டதாக கூறிய ராணுவ வீரர் ஷைன் குமார் உடலிலும், முகத்திலும் எந்தக் காயங்களும் இல்லை. இதனால் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது.

இதைத் தொடர்ந்து கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ராணுவ வீரர் ஷைன் குமாரிடமும், அவரது நண்பர் ஜோஷியிடமும் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆனால் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடந்ததற்கான எந்தத் தடயமும் சிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, தான் கூறியது அனைத்தும் சித்தரிக்கப்பட்ட நாடகம் என்று ஷைன் குமார் ஒப்புக்கொண்டார். நாடு முழுவதும் உள்ள வெகுசன ஊடகங்கள் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவும், எதிர்வரும் காலங்களில் நல்ல சலுகைகளுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு நாடகத்தை ராணுவ வீரர் அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

இதன்பேரில், ராணுவ வீரர் ஷைன் குமாரையும், அவரது நண்பர் ஜோஷியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.உண்மையிலேயே பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்கள் இவ்வாறு செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல இதற்கு முன்பு தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு எனும் கிராமத்தில் கடை வைத்துள்ள தனது மனைவி கீர்த்தியை 120 பேர் சேர்ந்து தாக்கி மானபங்கம் செய்ததாகவும், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும் ராணுவ வீரர் பிரபாகரன் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவிற்கு காணொளி மூலம் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

ஆனால், ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக வரும் செய்தி உண்மையல்ல என்றும், இராணுவ வீரரின் புகார் மிகைப்படுத்தப்பட்டது என்றும் தீவிர விசாரணைக்கு பிறகு  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

– பாரூக்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp