மறைந்த திரைப்படகலைஞர் மாரிமுத்து ( 1967 – 2023 )
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல்வேறு படங்களில் நடித்தவர் மாரிமுத்து. இவர் 1966-ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலை எனும் ஊரில் பிறந்தவர். சினிமாவில் எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்து சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து.
சென்னைக்கு வந்த அவருக்கு பெரிய பட வாய்ப்பு எல்லாம் கிடைக்கவில்லை. அதனால் ஹோட்டலில் வெயிட்டராகத்தான் பணியாற்றினார்.
அதன் பின்னர் இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.
அதன் பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக மாறிய நிலையில், அரண்மனைக் கிளி உள்ளிட்ட படங்களில் பணியாற்றி சினிமாவை கற்றுக் கொண்டார்.
மேலும் யுத்தம் செய், கொம்பன், மருது, திருநாள், பைரவா, மகளிர் மட்டும், மதுர வீரன், எனிமி, பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம், மிஸ்டர் லோக்கல், புலிகுத்தி பாண்டி, சுல்தான், விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். யதார்த்தமாக நடிக்க கூடியவர் என பெயர் பெற்றவர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
2008-ம் ஆண்டு பிரசன்னா ஹீரோவாக நடித்த கண்ணும் கண்ணும் படத்தை இயக்கி தனது இயக்குநர் கனவை நனவாக்கினார். அதற்கு முன்னதாக அஜித்தின் ஆசை படத்திலும் துணை இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. பிறகு பல ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு புலிவால் படத்தை இயக்கினார்.
இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் மாறிய மாரிமுத்து.. அஜித்தின் வாலி, விஜய்யின் உதயா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் மற்றும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாரிமுத்து.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலம் பட்டித் தொட்டியெங்கும் இவர் சென்றடைந்தார்.
அதுவும் குறிப்பாக “இந்தாம்மா… ஏய்…” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த சீரியல் மூலம் உலகளவில் உள்ள தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் மாரிமுத்து.
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இவர் பேசிய வசனங்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளனர். சீரியலில் மனதில் பட்டதை பட்டென பேசிவிடும் ஒரு கதாபாத்திரம் தான் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் ரியல் லைஃபிலும் மாரிமுத்து இருப்பார் என்பதற்கு சான்றாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக மாரிமுத்து கலந்து கொண்டார்.
அதிலும் ஜோதிடத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என மாரிமுத்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு தற்போது வரை சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக உள்ளது.
“ஜோசியம் பார்ப்பவர்களையும், ஜாதகம் பார்ப்பவர்களையும் மன்னிக்கவே கூடாது. மன்னிக்க முடியாத குற்றவாளிகள் அவர்கள் மட்டும் தான். நம் இந்தியா இந்த அளவுக்கு பின் தங்கி இருப்பதற்கு காரணம் ஜோசியர்கள் மட்டும் தான்” என மாரிமுத்து சொன்னதை கேட்டு கடுப்பான ஜோதிடர் ஒருவர், ஜோதிடம் சொல்பவர்கள் வழிகாட்டிகள் என சொல்ல, இதற்கு தரமான பதிலடி கொடுத்தார் மாரிமுத்து.
தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆகமாட்டார், அந்த பாக்கியம் அவருக்கு இல்லை என இந்தியாவில் இருக்க அத்தனை ஜோசியரும் சொன்னார்கள். இன்னைக்கு அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார், மூஞ்ச கொண்டு போய் எங்க வச்சிப்பீங்க.
அதே மாதிரி எந்த ஜோசியனாவது 2004-ல சுனாமி வரும்னு சொன்னானா? எந்த ஜோசியனாவது 2015-ல சென்னை வெள்ளத்துல முங்கும்னு சொன்னானா? எந்த ஜோசியனாவது 2020-ல கொரோனா வரும்னு சொன்னானா? வந்ததுக்கு அப்புறம் 1008 சொல்லுவாங்க. இவங்களையெல்லாம் மன்னிக்கவே முடியாது.
ரஜினிகாந்த் பிறந்த அதே நாள்ல, அதே நிமிஷத்துல அதே செகண்ட்ல இந்தியாவுல மட்டும் 57,000 குழந்தை பிறந்திருக்கு, ரஜினிகாந்த் மட்டும் எப்படி சூப்பர்ஸ்டார் ஆனாரு? மத்தவங்க ஏன் ஆகல?” என மாரிமுத்து கேட்டதும் அங்கிருந்த ஜோதிடர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள்.
இப்படி ரியல் லைஃபிலும் குணசேகரனாக மாறி ஜோதிடர்களை மாரிமுத்து வெளுத்து வாங்கிய வீடியோ இணையத்தில் படு வைரல் ஆனது. இதற்கு அன்று நிகழ்ச்சியிலேயே பல ஜோதிடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதுபோல அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாக ஜோதிடர்கள் பலர் நடிகர் மாரிமுத்து மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், “காதலில் தோற்றுப் போனால், வாழ்க்கையின் இறுதி காலம் இல்லை. அதற்கு அப்புறமும் வாழ்க்கை இருக்கிறது. காதல் தோல்வியடைந்துவிட்டது, காதலித்த பெண் தூக்கி எறிந்துவிட்டாள் என்று நினைக்கக் கூடாது. இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்தும்.
எனக்கு பிடித்த வாசகம், தடைக்கல்லை படிக்கல்லாக்கு என்பதாகும். காதல் தோல்வி என்பதெல்லாம் எண்டே கிடையாது. வாழ்க்கையில் நிறைய இன்பம், சந்தோசம் இருக்கிறது. அதை அனுபவிக்க வேண்டும். தோல்வி அடைந்தால் சரக்கு அடிக்கிறது, வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது தவறு. உன் முன்னாடி முன்னேறிக் காட்டுகிறேன் என வளர வேண்டும்.
நான் வீட்டில் ரொம்ப கூலான ஆள். எதிர்நீச்சலின் ஆதி குணசேகரன் ஒரு கதாபாத்திரம். வீட்டில் நான் ரொம்ப கூலாக, லவ்லியா தான் இருப்பேன். மாரிமுத்து வீட்டில் யாரையும் அதட்டிப் பேசமாட்டான். ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தை கெட்டவனாக தான் வடிவமைத்தோம். அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் திட்டுகிறார்கள் என்றால், அந்த கதாபாத்திரம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.
எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பித்து 200 எபிசோட் வரை தான் என்னை எல்லோரும் திட்டினார்கள். இப்போது என்னை ஹீரோ ஆக்கிவிட்டார்கள். அது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவுக்கு ரசிக்கிறார்கள். திட்டுவது நல்லது. திட்டினால் தான் அந்த கதாபாத்திரம் சரி. ஆதி குணசேகரன் ஜெயித்து விட்டான்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தான் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக இன்று காலை சென்னையில் டப்பிங் பேசி வந்தார் மாரிமுத்து. அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டப்பிங்கை பாதியில் நிறுத்திவிட்டு, அவரே காரை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மாரிமுத்துவிற்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். மாரிமுத்துவின் வீடு சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ளது.
மதியத்திற்கு மேல் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. மாலை வரை சென்னையில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதன்பிறகு அவரது சொந்த ஊரான தேனி, பசுமலைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை (செப்.,9) இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.
57 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுமா? என்றெல்லாம் மாரிமுத்துவின் ரசிகர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் “ஏய் இந்தாம்மா” என அவர் பேசும் வசனங்களை வைத்தும் அவரது அட்ராசிட்டியை வைத்தும் ஏகப்பட்ட மீம்கள் பறந்த நிலையில், தற்போது எல்லாமே கண்ணீர் அஞ்சலி பதிவுகளாக மாறி உள்ள து குறிப்பிட தக்கது!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.