புதுக்கோட்டை விஜயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையா – மாரிக்கண்ணு தம்பதி. இவர்களுக்கு மகரஜோதி என்ற மகளும் மணிமுத்து, மாதேஸ்வரன் என 2 மகன்களும் உள்ளனர். மாதேஸ்வரன், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று (செப்.25) காலை பள்ளிக்கு வந்த மாணவன் மாதேஸ்வரன், தலை முடியை முறையாக வெட்டவில்லை என ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், இதனால் மாணவன் 12 மணிக்கெல்லாம் பள்ளியை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாலை 7 மணியைக் கடந்த பின்னரும் மாதேஸ்வரன் வீட்டிற்குத் திரும்பாத நிலையில் அவரது பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போது தலைமை ஆசிரியர் முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் மாதேஸ்வரனைத் தேடியுள்ளனர். இரவு 8 மணிளவில் பள்ளி வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தும், மாணவனைக் கண்டுபிடிக்க முடியாததால், பள்ளிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மாணவனின் நண்பர்கள் தேடிப் பார்த்தபோது அங்கு மாணவன் மாதேஸ்வரன் தூக்கிட்ட நிலையில்
சடலமாகக் கண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கணேஷ் நகர் காவல்துறையினர் உடலை மீட்க முயன்ற போது, அவர்களை தடுத்து நிறுத்திய உறவினர்கள், மானவனின் உயிரிழப்புக்குக் காரணமான ஆசிரியர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என கடும் வாக்குவாதம் செய்தனர்.
மேலும், மாணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி, மாணவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உயிரிழந்த மாணவனின் நண்பர்கள் உடலைத் தூக்கிக்கொண்டு சாலைக்குச் சென்று போராட்டம் நடத்த முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 5 மணி நேரத்தைக் கடந்த நிலையில் மாதேஸ்வரனின் உடலை போலீசார் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, மாணவன் மாதேஸ்வரன் மரணம் குறித்து கணேஷ் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று (செப் 26) காலையில் பள்ளி அமைந்துள்ள புதுக்கோட்டை – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உயிரிழந்த மாதேஸ்வரனின் நண்பர்கள் மற்றும் உடன் பயின்ற பள்ளி மாணவர்கள் சாலையில் மரக்கட்டைகள், கற்களைப் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி ராகவி தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் பள்ளியின் பின்புறமாகப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து கற்களை வீசி தாக்கியதாகவும், அப்போது அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி ஆகியோர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் மாணவன் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
மாணவனது முடி மற்றும் தாடியை சீர் செய்து கொண்டு வருமாறு பள்ளியை விட்டு ஆசிரியர்கள் அனுப்பிய நிலையில், மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதிலிருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மைய எண் – 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மைய எண் – 04424640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)