கிராம மக்களின் கோரிக்கைகளை அறிந்து அவர்களின் குறைகளைக் களையவும், கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கும் வசதியாக ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், மே 1 தொழிலாளர் தினம் மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அதன்படி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் என்ற ஊராட்சியில் உள்ள கோவிலில் கிராம சபை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சித் தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அம்மையப்பர் என்ற விவசாயி, “ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், இந்த ஊராட்சியிலிருந்து மாவட்ட ஆட்சியரால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், ஏன் மீண்டும் இந்த ஊராட்சியில் வந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்?” என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சிச் செயலர் தங்கப்பாண்டியன், “யார்ட்ட கேள்வி கேக்குற.. என்ட்ட கேள்வி கேக்குற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா..” என்று கத்திக்கொண்டே ஓடி வந்து, விவசாயி அம்மையப்பரின் நெஞ்சில் மிதித்தார். ஊராட்சி மன்ற செயலாளருக்கு ஆதரவாக அருகில் இருந்தவரும் விவசாயி கன்னத்தில் அறைந்தார். இதனால் அம்மையப்பருக்கு நெஞ்சு வலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை அங்கிருந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் விவசாயியைத் தாக்கிய ஊராட்சிச் செயலாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தங்க பாண்டியன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வயது முதிர்ந்த விவசாயியை ஊராட்சி செயலர் நெஞ்சில் மிதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. ஒரு விவசாயியை, அதுவும் வயது முதிர்ந்த ஒருவரை, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் எட்டி உதைக்கும் துணிச்சல் ஊராட்சிச் செயலருக்கு எப்படி வந்தது? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது
ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
– பாரூக்.