கோவை ராமநாதபுரம் கணேசபுரம் சடையப்பன் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவருடைய மனைவி 51 வயதான சாந்தகுமாரி. இவர் சம்பவத்தன்று தனது மகன் 25 வயதான ராகுலுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் உள்ள கல்யாண மண்டபம் அருகே சென்ற போது சாந்தகுமாரி அணிந்திருந்த ஆடை பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் பைக் நிலைதடுமாறி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்ததில் சாந்தகுமாரிக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ராகுல் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். உயிருக்கு போராடிய சாந்தகுமாரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.