கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த அசோக்நகரில் தனியார் ஒர்க்ஷாப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஒர்க்ஷாப்பில் 4 சக்கர வாகனங்களுக்கான டிங்கரிங் மற்றும் பெயிண்டிங் வேலைகள் செய்து கொடுக்கப்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒர்க் ஷாப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஒர்க்ஷாப்பில் இருந்து திடீரென புகை வந்தது. இதுபற்றி அந்த பகுதியினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்றனர். ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 14 கார்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. காலை 7. 15 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் பணியை தொடங்கி தீயை அணைக்க போராடினர்.
சுமார் 1. 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 8. 45 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருந்தாலும் அங்கு நின்ற 14 கார்களும் எரிந்து நாசமாகின. கவுண்டம்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.