மதுரை கே.புதூரில் உள்ள ஜன்னா பப்ளிக் பள்ளியில், ஷூ அணிந்து வராததற்காக 6ஆம் வகுப்பு மாணவன் மீது பள்ளி நிர்வாகி ஷகீத் என்பவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் மாணவனின் கண்பார்வையே கேள்விக்குறியாகும் வகையில் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. மதுரை கே.புதூர் அல் அமீன் நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான். இவரது 12 வயது மகன் அதே பகுதியில் இயங்கி வரும் ஜன்னா பப்ளிக் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் மழையின் காரணமாக ஷூ அணிந்து செல்வதற்கு பதிலாக பள்ளிக்கு செப்பல் அணிந்து சென்றிருக்கிறார் மாணவன். இதற்கு ஆசிரியர்களே எதுவும் சொல்லாத நிலையில் பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் ஷகீத் என்பவர், ஏன் ”ஷூ” அணிந்து வரவில்லை எனக் கேட்டு மாணவன் கன்னத்தில் ஓங்கி பலமாக அடித்திருக்கிறார்.
இதில் மாணவன் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வையே பறிபோகும் அளவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், ஆசிரியர் அல்லாத ஒருவர், பள்ளியின் அலுவலக நிர்வாக பொறுப்பாளராக இருப்பவர் எப்படி தங்கள் மகனை அடிக்கலாம் அவருக்கு யார் அந்த உரிமையை வழங்கியது என பள்ளி நிர்வாகத்திடம் மாணவனின் தந்தை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதற்கு நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லுங்க, எங்களை ஒன்றும் செய்ய முடியாது, முடிந்ததை பாருங்க என ஆணவத்துடன் ஷகீத் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகார் மீது பள்ளி தாளாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே மதுரை மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவை தொடர்பு கொண்டு, பள்ளியில் ஆசிரியராக இல்லாத ஒருவர் மாணவனை அடிக்கலாமா என்பது பற்றி விளக்கம் கேட்டபோது அவர் கூறியதாவது, ”மாணவனின் தந்தை அளித்த புகார் குறித்து இன்று காலை பள்ளியில் விசாரணை நடத்தவிருக்கிறோம். நானே நேரடியாக விசாரணை நடத்தவுள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறினார். இந்நிலையில் பள்ளி நிர்வாகி ஒருவர் 12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய சம்பவமானது அப்பள்ளி பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
– தமிழரசன், மேலூர்.