கோவை போத்தனூர் திருமறை நகரை சேர்ந்தவர் 32 வயதான ஹக்கீம். இவர் தனியாக வசித்து வந்தார். இவரது தாய், தந்தை உடல்நலக் குறைவால் இறந்து விட்டனர்.
இதன் காரணமாக ஹக்கீம் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களாக வெளியே நடமாடவில்லை. அவரது உறவினர் 52 வயதான ஜாபர் சாதிக் என்பவர் ஹக்கீமை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
ஆனால் அவர் பல முறை அழைத்தும் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் ஹக்கீம் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ஹக்கீம் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கும் மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எப்படி இறந்தார்? இறப்பிற்கான காரணம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.