சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவிற்கு உட்பட்ட வடவன்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த குடும்பங்கள் நெடுங்காலமாக வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட ஆதிராவிடர் காலனியில் சுமார் 18 சென்ட் நிலமானது காலனி பொது இடமாக வருவாய்த்துறை கணக்குகளில் உள்ளது.
அதே பகுதியில் மற்றொரு சாதியைச் சேர்ந்த குடும்பத்தினர் காலனி பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு தங்களது கட்டுப்பாட்டில் சுமார் 18 வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இந்த இடத்தில் மழையால் பெய்த நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி மிகவும் அதிகமான கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாகவும் அப்பகுதியின் பட்டியலின மக்களுக்கு நோய்களை உருவாக்கும் இடமாகவும் உள்ளது.
இதுகுறித்து பட்டியலின மக்கள் கேட்கும் பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் பிரச்சனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இந்த ஆக்கிரமிப்பு பிரச்சனையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிங்கம்புணரி ஒன்றிய நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இப்பிரச்சனையை கிராமத்தின் நிர்வாக அலுவலர் காவல்துறையினர் மற்றும் சிங்கம்புணரி வட்டாட்சியர் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்கவும் மற்றும் சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கையும் பாதுகாப்பும் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை (வ) மாவட்டத்தின் சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் மல்லை.கரு.சந்திரன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் ஜெசிபி வாகனத்தை கொண்டு அவ்விடத்தை சுத்தம் செய்து செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பட்டிலின மக்கள் வசிக்கும் காலனியில் அப்பகுதிக்கென பொது இடங்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கப்பட்டு அவை அரசின் வருவாய் கணக்குகளிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது ஆனால் இயல்பில் பட்டியலென மக்களின் பயன்பாட்டில் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய நிதர்சனம் ஆகும்.
-தமிழரசன், மேலூர்.