கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனசரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 13 காட்டு யானைகள் குட்டி யானை ஒன்றுடன் சுற்றி திரிந்தது.
வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை கூட்டம் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது. ஆனால் குட்டியானை யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து அந்த பகுதியில் உள்ள சாலையில் தனியாக சுற்றி திரிந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து குட்டியானையை மீட்டனர்.
அதனை தொடர்ந்து, குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணியை தொடங்கினர்.
யானை எங்கிருக்கிறது என்பதை கண்காணித்தனர்.
அப்போது யானைகள் பன்னிமேடு பகுதியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் இருப்பது தெரியவரவே குட்டியானை அங்கு அழைத்து சென்று விட்டனர்.
குட்டி யானையின் சத்தத்தை கேட்டு, தாய் யானையும் மற்ற யானைகளும் வந்து குட்டி யானையை தங்களுடன் அழைத்து சென்றன.
தாயை பார்த்ததும் குட்டி யானை துள்ளி குதித்து ஓடி தனது தாயுடன் சேர்ந்து கொண்டு வனத்திற்குள் பயணித்தது.
சம்பவத்தன்று மீண்டும் குட்டி யானையுடன் யானை கூட்டம் பன்னிமேடு பகுதியில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக வந்தன.
தண்ணீரை பார்த்ததும் குட்டி யானைக்கு அலாதி சந்தோஷம் ஏற்பட்டது. சந்தோஷத்தில் துள்ளி குதித்த யானை ஆற்று தண்ணீருக்குள் குதித்து, அங்குமிங்கும் நீச்சல் அடித்து உற்சாக குளியல் போட்டது.
ஒருகரையில் இருந்து மறு கரைக்கு செல்வது, அங்கிருந்து தாயை நோக்கி வருவதுமாக நீச்சல் அடித்து குளியல் போட்டது குட்டி யானை. தாய் யானை தனது குழந்தைக்கு பாதுகாப்பு அரணாக தண்ணீருக்குள் இறங்கி நின்று கொண்டது.
வனத்துறையினர் தொடர்ந்து யானை கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் யானைகளை கண்காணிக்கின்றனர்.
அப்போது தோணிமூடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அருகே உள்ள பாறையில் குட்டி யானை தனது தாயுடன் படுத்து உறங்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதில் தாய் யானை படுத்துகொண்டிருக்க, சிறிது நேரம் தனது தாயை சுற்றிய குட்டி யானை, தனது தாயின் அருகே வந்து படுத்து கொண்டது.
உடனே தாய் யானை, தனது துதிக்கையால் குட்டி யானையை அரவணைத்து கொண்டது. 2யானைகளும் அங்கேயே படுத்து சில மணி நேரங்கள் உறங்கின.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.