தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் ஆரம்பப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு சத்தான மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உறவின்முறை தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் செயலர்கள் கணேச நாடார், மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் மாபெரும் பாரம்பரிய உணவு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மழலை மாணவர்கள் கலந்துகொண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், மிகுந்த ஆரோக்கியத்தையும் கொண்டுள்ள சத்தான பாரம்பரிய உணவு வகைகளான பாசிப்பருப்பு அல்வா, கேப்பை – கேழ்வரகு வடை, ஓலைக்கொழுக்கட்டை, பூரணக்கொழுக்கட்டை, கேப்பைக்களி, குதிரைவாலி சோறு, முடக்கத்தான் தோசை, கம்மஞ்சோறு – கருவாட்டுக்குழம்பு, கேழ்வரகு இடியாப்பம், கம்பரிசிப்புட்டு, வேர்க்கடலை உருண்டை, கவுனி அல்வா, முருங்கைக்கீரை அடை தோசை உள்ளிட்ட பல வகையான பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து கண்காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதூர் வட்டாரக் கல்வி அலுவலர் இராமசுப்பிரமணியம் பள்ளி மாணவர்களிடம் இந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் நீங்கள் கொண்டு வந்துள்ள உணவு தான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது எனவும், கடைகளில் விற்கும் தின்பண்டங்களை உண்பதற்கு பதிலாக இது போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் ரெங்கநாயகி, சிறப்பு விருந்தினர் பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி செயலர் ஆதி மாரீஸ்வரன் உள்ளிட்டோர் பள்ளியில் மாணவர்கள் வைத்திருந்த உணவு கண்காட்சியை பார்வையிட்டு அதில் மிகவும் சிறப்பாக பாரம்பரிய உணவை செய்திருந்த பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராஜத்திலகம், பத்ம செல்வி, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.