2-ம் இராமேஸ்வரம் என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் தீர்த்தக்கரையில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு விளாத்திகுளம் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.
அமாவாசையை பொருத்தமட்டில் ஓர் ஆண்டில், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு மிகவும் உகந்த தினமான பார்க்கப்படுகிறது.
இந்த 3 தமிழ் மாதங்களில் வருகின்ற அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால், இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் எனவும், குடும்பம் செழிக்கும் எனவும் ஐதீகம் உண்டு. இதற்காக ஆண்டுதோறும் இந்நாட்களில் பலரும் தங்களது பகுதிகளில் உள்ள கடற்கரை, ஆறு மற்றும் படித்துறைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் கடற்கரையில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசைத் தினத்தன்று, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதே போன்று இந்தாண்டு ஆடி மாத அமாவாசையை 2-ம் இராமேஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த சிப்பிக்குளம் கடற்கரையில் அதிகாலை 5.00 மணி முதலே விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து எள், பூ, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பூஜை நடத்தி, வழிபட்டு பின் பிண்டத்தினை சிப்பிக்குளம் கடலில் கரைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடிச் செல்கின்றனர்.
இதனையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்கள் அனைவரும் சிப்பிகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வழிபாடு நடத்தி சென்றனர். இதனால் இப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.