
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து குறைபாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களும் ஆட்டோ ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் எப்போதும் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குப் பொது போக்குவரத்தையே அதிகம் நம்பியுள்ளனர். ஆனால் எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் தினசரி வேலை வாய்ப்பு அவசர மருத்துவ உதவி மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களையும் ஆட்டோக்களையும் மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
வால்பாறை நகரில் ஒரே ஒரு பெட்ரோல் பங்க் மட்டுமே செயல்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அங்கு கேன்களில் பெட்ரோல் வழங்க ஊழியர்கள் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
மலைப்பகுதியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களின் எரிபொருள் கொள்ளளவு (டேங்க் திறன்) மிகவும் குறைவு. எஸ்டேட் பகுதிகளிலிருந்து நகருக்குள் வந்து செல்லும்போது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டால், மாற்று வழி இல்லாமல் வாகனங்கள் நடுவழியில் நிற்கும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால், கூட்ஸ் ஆட்டோக்கள் மூலம் கூடுதல் வாடகை கொடுத்து வாகனங்களை மீட்டு வர வேண்டியுள்ளது. இது பொதுமக்களுக்கு தேவையற்ற பண விரையத்தையும் நேர விரையத்தையும் ஏற்படுத்துகிறது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வால்பாறை பெட்ரோல் பங்க்கில் அவசரத் தேவைக்காகக் குறைந்தபட்சம் அரை லிட்டர் (1/2 லிட்டர்) முதல் ஒரு லிட்டர் வரை கேன்களில் பெட்ரோல் வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ சங்க பொறுப்பாளர் பரமசிவம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து கள ஆய்வு செய்தபோது மலைப்பகுதி மக்களின் இந்த கோரிக்கையில் உள்ள நியாயம் தெளிவாகப் புரிகிறது. போக்குவரத்து வசதி குறைவாக உள்ள இந்த சூழலில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை மாண்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசீலித்து உரிய ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு 100% நல்லதொரு தீர்வை வழங்குவார் என மலைப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள் STAR M.சுரேஷ்குமார்.










