
பொள்ளாச்சி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதிய பேருந்து நிலையத்தில் முறையான கழிப்பறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பயணிகள் அமருவதற்கான போதிய இருக்கைகள், இரவு நேரங்களில் போதுமான விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகளால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதுகாப்பு கருதி அமைக்கப்பட வேண்டிய சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளும் இல்லாத நிலையில், பேருந்துகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் நிறுத்துவதற்கும், பயணிகள் சிரமமின்றி ஏறி இறங்குவதற்கும் போதிய இடவசதி இல்லை எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாராபுரம் – திருப்பூர் பேருந்துகளை மாற்றியதால் பயணிகள் அவதி
கோயம்புத்தூர் உள்ளிட்ட தொலைதூர நகரங்களில் இருந்து வரும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவது போக்குவரத்து ரீதியாக ஓரளவு பொருத்தமானதாக இருக்கலாம். குறிப்பாக கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ஒரே வழித்தடத்தில் பயணிப்பதுடன், அந்த வழித்தடத்திலேயே புதிய பேருந்து நிலையம் அமைந்திருப்பதால் அவற்றை இங்கு இயக்குவது பயணிகளுக்கும் போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், தாராபுரம் – திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றியிருப்பது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நகரின் மையப்பகுதிக்கு எளிதாக வந்து செல்ல வேண்டிய பயணிகள், புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்று மீண்டும் நகருக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன், கூடுதல் கட்டணம் செலுத்தி நகரப் பேருந்துகள் அல்லது ஆட்டோக்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சலும், கூடுதல் நிதிச்சுமையும் ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.
புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றுத் திட்டம் தேவை
புதிய பேருந்து நிலையத்தின் தற்போதைய அமைவிடம் மற்றும் சுற்றுப்புறத்தை கருத்தில் கொண்டு, எதிர்கால போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் விரிவான மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்புறமாக உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் காரணமாக எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், அந்த அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நகரப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதியில் பயணிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நிறுத்தி இயக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்த வேண்டும்
பொள்ளாச்சி நகரில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்களையும் முறையாக மறுவடிவமைத்து, நவீன வசதிகளுடன் மேம்படுத்தி முழுமையாகப் பயன்படுத்தினால், தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கி, இடப்பற்றாக்குறை இருந்தால் அதனை ஒட்டியுள்ள பேருந்து நிலையப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து, ஒரே பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக உருவாக்குவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்து நிலையமாக மாற்றலாமா?
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகள் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்துகளுக்கான பிரத்யேக பேருந்து நிலையமாக மாற்றுவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.
இவ்வாறு மாற்றம் செய்வதன் மூலம் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதுடன், அருகிலுள்ள நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளை குறைக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
மற்றொரு நீண்டகாலத் தீர்வாக, பொள்ளாச்சி நகரத்திலிருந்து சுமார் 3 முதல் 5 கிலோமீட்டர் தொலைவில், அனைத்து வசதிகளுடனும் கூடிய நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைப்பது குறித்தும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சியின் எதிர்கால நகர வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, தற்காலிக தீர்வுகளை விட நீண்டகாலத் திட்டமிடலுடன் பேருந்து நிலையங்களை வடிவமைத்து செயல்படுத்துவது அவசியம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
மக்கள் எதிர்பார்க்கும் உடனடி நடவடிக்கைகள்
புதிய பேருந்து நிலையத்தில் சுத்தமான மற்றும் முறையான கழிப்பறை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் அமைக்க வேண்டும்.
பாதுகாப்பு கருதி தேவையான சுற்றுச்சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பேருந்துகள் ஒழுங்காக நிறுத்தவும், பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்கவும் போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும்.
தாராபுரம் – திருப்பூர் உள்ளிட்ட வழித்தடப் பேருந்துகளை பயணிகள் வசதிக்காக மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட ஒரே வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவது குறித்து திட்டமிட வேண்டும்.
நகரப் பேருந்துகளை பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலைய முகப்புப் பகுதியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போதைய இரண்டு பேருந்து நிலையங்களையும் நவீனமயமாக்கி ஒருங்கிணைத்து பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றுவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.
எதிர்கால பொள்ளாச்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நகருக்கு வெளியே 3 முதல் 5 கிலோமீட்டர் தொலைவில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்தும் நீண்டகால திட்டம் வகுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், அவசர அவசரமாக பேருந்து வழித்தடங்களை மாற்றி பொதுமக்களை அலைக்கழிப்பது நியாயமல்ல. பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் பொள்ளாச்சியின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத் துறையும் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, நடைமுறைக்கு ஏற்ற நிரந்தரத் தீர்வை அறிவிக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியின் வளர்ச்சிக்கு தேவையானது அவசர முடிவு அல்ல சரியான திட்டமிடலுடன் கூடிய நீண்டகால தீர்வே!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்







