
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக கடித தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் உறவினர்கள் பெற்றோர்கள் நண்பர்களுக்கு கடிதம் எழுதி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி செய்திருந்தார். உலக கடித தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி உலக கடித தினம் கொண்டாடப்படுகிறது. நவீன டிஜிட்டல் உலகில் அழிந்துவரும் கைப்பட எழுதும் கடிதப் பழக்கத்தை மீட்டெடுப்பதற்காக ஆஸ்திரேலிய எழுத்தாளர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ம் ஆண்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.
காகிதத்தில் மை கொண்டு எழுதும் கடிதங்கள் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். கடிதம் எழுதும் பழக்கம் நவீன உலகில் குறைந்துவிட்டது தற்போது உள்ள தொலைபேசி தொடர்புகள் மின்னணு வசதிகளினால் எளிதாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடிய நவீன தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு யாரும் எளிதில் கடிதம் எழுதுவதில்லை. அதையெல்லாம் நினைவு படுத்துவதற்காக தான் உலக கடித தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாகவுள்ளது.
இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும் என்று பேசினார். முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் அஞ்சல் அட்டை வழங்கி மாணவ, மாணவிகள் தங்கள் உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பினார்கள்.










