
நாட்டில் ஜனாதிபதி பதவி முதல் மத்திய அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வரை பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளில் அலங்கரிக்கிறார்கள். நாங்களே பழங்குடியின மக்களின் காவலர்கள் அவர்களை ஆட்சி அதிகாரத்திலும் அரசுத் துறைகளிலும் உயர்த்தி இருக்கிறோம் என மத்திய, மாநில அரசுகள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் யதார்த்த நிலைமை அதற்கு முற்றிலும் மாறாக உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூமாட்டி மற்றும் உலாந்தி ஆகிய பழங்குடியினர் கிராமங்களில் இன்றளவும் முறையான சாலை வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன.
தேர்தல் காலத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. ஆனால் இங்குள்ள பழங்குடியின மக்களில் சிலர் ஆனைமலை பேரூராட்சியிலும், சிலர் வால்பாறை பகுதியிலும் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வாக்களிக்கச் செல்வதிலேயே பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இப்பிரச்சனை தொடர்ந்த போதிலும் ஆட்சிகள் மாறினாலும் பழங்குடியினரின் காட்சிகள் மாறவில்லை.
சாமானிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கூட கூமாட்டி மற்றும் உலாந்தி போன்ற மலைக்கிராமங்களில் இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தமிழகத்தில் அமையும் புதிய ஆட்சிகள் தங்களை எளிய மக்களுக்கான அரசு என்று அறிவித்துக் கொண்டாலும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராட அனுமதி கேட்டால் காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
சாதாரண மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரின் உரிமைகளுக்காகவும் சட்டமன்றத்திலும் வீதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதே மக்கள் போராடும் போது காவல்துறையைக் கொண்டு தடுப்பது எந்த வகையில் நியாயம் எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆட்சியாளர்களின் உத்தரவின்பேரில் போராட்டங்களைத் தடுக்க நினைக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள், சாமானிய மக்களின் துயரங்களையும் மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்த்து வைக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் மக்களுக்குப் போராட்டங்கள் நடத்தும் வேலையும் இருக்காது.
இந்நிலையில் காவல்துறையின் அனுமதி மறுப்பையும் மீறி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி வால்பாறை காந்தி சிலை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட மலைவாழ் சங்கத்தின் தோழர் பரமசிவம் தலைமையில் தோழர்கள் முன்னிலையில் செங்கொடி ஏந்தி காந்தியடிகள் சிலை முன்பாக இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டத்தின் மூலமாவது இவர்களின் பல ஆண்டு கால அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– வால்பாறை P.பரமசிவம்.







