
பொள்ளாச்சி | நவம்பர் 20, 2026
வால்பாறை மற்றும் டாப்சிலிப் – பரம்பிக்குளம் மலைப்பாதைகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் நெகிழிக் கழிவுகளை வீசுவதைத் தடுக்கும் வகையில், பேருந்துகளில் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனக் கோரி, இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொள்ளாச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா. வெற்றிவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பொள்ளாச்சி துணை மேலாளர் (பணி மற்றும் பயிற்சி) திரு. ஜோதி மணிகண்டன் அவர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கை மனுவை வழங்கினார். மாயா பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு கமலக்கண்ணன் உடனிருந்தார்.
ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைச்சாலைகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களால் வீசப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், நெகிழிப் பைகள் உள்ளிட்ட கழிவுகள் வனச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டு பல நூறு கிலோ கணக்கில் கழிவுகளை அகற்றி வருகின்றனர். இருப்பினும், தூய்மைப்படுத்தப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் கழிவுகள் வீசப்படுவது கவலைக்குரியதாக உள்ளது.
எனவே, கழிவுகளை அகற்றுவதுடன், அவை உருவாகும் இடத்திலேயே அவற்றை முறையாகக் கையாள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்பதை வலியுறுத்தி இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் முக்கியக் கோரிக்கைகள்:
1\. வால்பாறை மற்றும் டாப்சிலிப் – பரம்பிக்குளம் வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் உரிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
2\. மலைப்பாதைகளில் பேருந்துகள் பயணிக்கும்போது, வனப்பகுதிகளிலும் சாலையோரங்களிலும் பிளாஸ்டிக் மற்றும் நெகிழிக் கழிவுகளை வீசக்கூடாது என ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.
3\. பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர கழிவுகளைப் பேருந்து நிலையங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் முறையாகச் சேர்க்க அறிவுறுத்த வேண்டும்.
4\. வனவிலங்குகளின் வாழிடத்தையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பது ஒவ்வொரு பயணியின் சமூகப் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இயங்கும் மிக முக்கியமான பொதுச் சேவை நிறுவனம் என்பதால், அதன் பேருந்துகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான பயணிகளிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என அறக்கட்டளையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வனம் என்பது சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்கான இடம் மட்டுமல்ல; எண்ணற்ற வனவிலங்குகளின் வாழிடம். வனத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை!
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை, பொள்ளாச்சி.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
M.சுரேஷ்குமார்.









