சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு ராம் (21). இவரது தந்தை பழனிவேல் திருப்பத்தூரில் நகைக்கடை வைத்துள்ளார். விஷ்ணு ராம்ராம், நேற்று மாலை தனது தாயாரிடம் கூறிவிட்டு திருப்பத்தூரிலிருந்து காரை எடுத்துக் கொண்டு தனியாக பிரான்மலை சென்றுள்ளார் . அங்கு மலை உச்சியில் உள்ள கொடுகுன்ற நாதரை தரிசிக்கதரிசிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மலை உச்சியிலிருந்து பொழுது சாய்ந்த நேரத்தில் அவர் இறங்கியபோது, பாதை சரியாகத் தெரியாமல் வனப்பகுதிக்குள் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், விஷ்ணு ராம் அங்குள்ள வழுக்குப்பாறை ஒன்றில் தவறுதலாக மிதித்து, வழுக்கி அருகிலிருந்த புதருக்குள் சரிந்து விழுந்திருக்கிறார்.
உடனடியாக, தனது தாயாருக்கு பாதை மாறிச் சென்று விட்டதாக அங்கிருந்து தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவரது தாயார் ஜோதி, உடனே வனத்துறைக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக பிரான்மலைக்கு வந்து அங்குள்ள கிராமத்தார்களிடம் தனது மகன் காணாமல் போன விபரத்தைக் கூறி அழுதுள்ளார்.
உடனே பிரான்மலை பாப்பாபட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் களமிறங்கி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் மார்கழி மாத குளிரையும் பொருட்படுத்தாமல் மலை முழுவதும் தேடினர். நள்ளிரவு நேரமாகியும் விஷ்ணு ராம் கிடைக்காததால், கடும் குளிர் மற்றும் இருட்டின் காரணமாக அவரை தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு கீழே இறங்கினர்.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை பாப்பாபட்டி வாலிபர் குழு மீண்டும் ஒன்று திரண்டு விஷ்ணு ராமை தேடும் முயற்சியைத் துவக்கினர். முயற்சியின் பலனாக மலை அடிவாரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் உச்சியில் உள்ள நரையன் கல்மேடு என்ற இடத்தில் விஷ்ணுராம் இருப்பதைக் கண்ட பாப்பாபட்டி இளைஞர்கள், சிறுகாயங்களுடன் இருந்த அவரை பத்திரமாக மலையிலிருந்து கீழே இறக்கினர்.
கிட்டத்தட்ட 14 மணி நேர தேடலுக்குப் பின் மீட்கப்பட்ட
விஷ்ணு ராமைக் கண்ட அவரது பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்ததுடன், உடனடியாக அவரை பிரான்மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவிக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு பணியிலிருந்த மருத்துவர் செந்தில், விரைந்து செயல்பட்டு விஷ்ணு ராமின் காயங்களுக்கு மருந்திட்டு, வழுக்கு பாறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு தையல் போட்டு சிகிச்சையளித்தார். மேலும், அவரைப் பரிசோதித்து நல்ல ஆரோக்கியமான நிலையில் விஷ்ணு ராம் இருப்பதாகக் கூறினார்.
அதன்பின்பு, மேல்சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு விஷ்ணு ராம் அழைத்துச் செல்லப்பட்டார். தங்களது மகன் விஷ்ணு ராமை மீட்க பெரும் முயற்சி எடுத்த பாப்பாபட்டி மற்றும் தேனம்மாள்பட்டி மீட்புக் குழு இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க மனதார நன்றி தெரிவித்தனர்.
– பாரூக், சிவகங்கை.