கோவையில் ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்! சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்!!

கோவை: ஈஷா சார்பில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ 2026 விளையாட்டுத் திருவிழாவின் கோவை மண்டல அளவிலான போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  (23/08/2026) சிறப்பாக நடைபெற்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றன.

இதில் கோவையில் நடைபெற்ற போட்டிகளை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் கொங்குநாடு கல்லூரியின் செயலாளர் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இதில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கனிமொழி சந்தோஷ் பேசுகையில், “சமூகத்தில் பலரும் பல்வேறு சங்கங்களையும் இயக்கங்களையும் தொடங்குகிறார்கள். ஆனால், அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவது இல்லை. ஒரு நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய மற்றும் கடினமான செயலாகும். ஆனால், ஈஷாவிடம் நான் கண்ட ஒரு முக்கியச் சிறப்பு அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகும். 18 ஆண்டுகளாக இளைஞர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு சமூக நோக்கத்தோடு ஈஷா கிராமோத்சவத்தை தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய செயலாகும்.

நமது முதலமைச்சர் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் விளையாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வெளிக்கொண்டு வருவதில் நமது முதலமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல்நலனும் குறைந்துகொண்டே வருகிறது. இன்றைய சூழலில், குழந்தைகள் காலை முதல் இரவு வரை அலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். மது மற்றும் புகைப்பழக்கத்தை விட, அலைபேசியின் அதீதப் பயன்பாடு குழந்தைகளின் சிந்தனைத் திறனைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. எனவே, குழந்தைகளுக்கு அலைபேசியை அளவோடு பயன்படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் தற்போதைய சூழலில், குழந்தைகளின் கவனத்தைத் சரியான திசையில் செலுத்த ஈஷா நடத்தும் இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. விளையாட்டை ஊக்குவிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், மனத்தெளிவையும், எதிர்கால இலக்குகளை நோக்கிய கவனத்தையும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது போல் உங்களின் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டிற்காக நேரம் ஒதுக்க வேண்டும்.” எனக் கூறினார்.

இதில் வெற்றி பெற்ற வாலிபால் மற்றும் த்ரோபால் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக த்ரோபால் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒரு வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகள் நடைபெற்ற 6 மண்டலங்களிலும் ஒரு சிறந்த த்ரோபால் வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலில் ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட போட்டிகள் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாத முதல் 2 வாரங்களில் நடைபெற்றது. தற்போது மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இறுதிப்போட்டி செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.

ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ₹5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ₹3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ₹1 லட்சமும், ₹50,000-மும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ₹1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts