பொள்ளாச்சி அருகே காதலன் இறந்த வேதனையில், கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் சுஜிதா (18). இவர் பொள்ளாச்சியில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம், 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சுஜிதாவுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த அஜய் (19) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுஜிதா, அஜயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் மனவேதனையடைந்த அஜய் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், சுஜிதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த சுஜிதா சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார், சுஜிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.